சாகலாம்னு முடிவு பண்ணி, செத்தும் போயிட்டேன்.
வைகுண்டத்துக்கு போனா...
(கிறிஸ்தவனுக்கு ஏதுப்பா வைகுண்டம்னு கேக்காதீங்க. நம்பளுக்கு எல்லா மதமும் Accepted. )
அங்க மகாவிஷ்ணு (எனக்கு ரொம்ப பிடிச்ச சாமி) என்னைய ஒருமாதிரி பாத்தாரு.
"ஏண்டா பூமியக் கெடுத்தது பத்தாதுன்னு இங்க வேற வந்துட்டியா"- ன்னு மெதுவா முனகின மாதிரி இருந்திச்சு.
அப்பவே புரிஞ்சு போச்சு. நானே யோசிச்சுக்கிட்டுத்தான் இருந்தேன்.
(நாம போக வேண்டிய இடம் நரகமாச்சே.
"பங்காளி லூஸிஃபேர்" கைவிட்டுட்டாரோ- ன்னு, சாக்ரட்டீஸ் ரேஞ்சுக்கு மண்டைய சொறிஞ்சிட்டே பின்னாடி வாலை திருகிட்டே யோசிக்கிற மாதிரி ஆக்ட் குடுத்தேன்.)
மகா விஷ்ணு வாய் மலர்ந்தார்.
"ஏம்பா சாம்., நீ வர வேண்டிய இடம் இது இல்லப்பா.
(ஆஹா இனி ஸ்ட்ரெய்ட்டா நரகம்தான்.)யாரங்கே இவனை சிவலோகம் அழைத்துச் செல்லுங்கள்"
(போச்சுடா. புஸ்ஸ்ஸ்...!)அங்க போனா... சிவபெருமான், நெத்திக்கண்ணத் தெறக்க ரொம்ப முஸ்தீபா இருந்தார்.
"எலே! யாருலே உன்னைய இங்க உள்ள விட்டது"
(ஆஹா நரகம் போகப் போறோம்.)"கிளம்புலே சத்திய லோகத்துக்கு!"
(மறுபடியும் புஸ்ஸ்ஸா!)அங்க பிரம்மா எட்டுக் கண்ணையும் மூடி தியானத்துல....
சரஸ்வதி அம்மாதான் பேசினாங்க.
"மகனே சாம்! இப்பத்தான் நாங்க கொஞ்சம் நிம்மதியா, இருக்கோம். நீ வேறெங்கயாவது போயிடேன்!"
உடனே... கௌரவம் படத்துல இளம் சிவாஜி கணக்கா...
"நான் எங்க போவேன். நேக்கு யாரத் தெரியும்? போகணும்னு மட்டுந்தான் தோணறது. ஆனா எங்க போறதுன்னு தோணலியே.?" சொல்லு தாயே சொல்லு- ன்னு
என் அழுகாச்சியப் பாத்துட்டு...
அவங்களே மனமிரங்கி அவங்க வீட்டுக்காரரை எழுப்பி, ஒரு ரெக்கமண்டேஷன் லெட்டர் எழுதிக் குடுக்கச் சொல்லி (இத எடுத்துட்டு நீ எங்க போனாலும் இடம் கிடைக்கும். போ!)- ன்னு அனுப்பிட்டாங்க.
அடுத்தது விடு ஜூட்... கிற்ஸ்தவர்களின் சொர்க்கம் எனப்படு.ம்.. பரதேஸ் எனப்படும் Paradise.
அங்க கேட் வாட்ச்மேன் "ராயப்பர்" அதாம்பா பீட்டர் (Peter) பிரம்மாவுடைய லெட்டரப் கால்மணி நேரமா உத்து உத்து பாத்துட்டு....
(மறக்காம, "பிரம்மா நல்லாயிருக்காரா-" ன்னு கேட்டாரு)"ஏதோ புரியற மாதிரி இருக்கு, ஆனா ஒண்ணும் புரியல!
(பின்ன! பிரம்மா எல்லாருக்கும் தலையெழுத்த எழுதற பேனாவால, எழுதும்போதே நெனச்சேன். எனக்கு ஒரு பெரிய டவுட். அவரு எழுதற எழுத்த அவராலயே படிக்க முடியுமா?) "தவிரவும் யேசு நாதர் உன்னய இங்க பாத்தா, அடிச்சே துரத்திடுவாரு! சொல்லாம கொள்ளாம ஓடிப் பூடு" ங்கவும்...
அடுத்தததா கிறிஸ்தவர்களின் நரகம்.
(ஹைய்யா! ஒரு வழியா நம்மளுக்குப் பிடிச்ச இடம்!)
நான் வரேன்னு தெரிஞ்ச உடனே அதன் தலைவர், "நம்ம பங்காளி லூஸிஃபேர்" தன் ரத, கஜ, துரக பதாதிகளுடன்... வெளிலயே வந்துட்டார்.
நம்மளுக்கு இத்தினி வரவேற்பா... ன்னு பாத்தா...
அவரு கண்கலங்க என் கையப் பிடிச்சுட்டுச் சொன்னார்.
"ராசா1 சாம்.! நீ இங்க ஒரு சாதாரண அங்கத்தினரா வரலாமா? ஒரு உறையில ரெண்டு கத்தி இருக்கலாமா? எனக்கு இப்ப ரொம்ப வயசாயிடுச்சு. சீக்கிரமே ரிட்டையர் ஆயிடுவேன். அதுக்கப்புறம் நீ வந்து எனக்கப்புறம் இந்த நரகத்தின் தலைவர் பதவியை ஏத்துக்கோ"
(அடப்பாவிப் பங்காளி! நீ எப்படா எங்கூரு அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்ச?)அடுத்து எமலோகத்துலையும் ரிஜக்ட்டட்.
கடைசீயில... நொந்து நூலாயி...
நடு வானத்துலயே நின்னு... இந்த உலகத்துல உள்ள அத்தினி கடவுள் பேரையும் சொல்லிக் கூப்பாடு போட்டு, குய்யோ முறையோ- ன்னு நான் கத்தவும்....
ஒரே களேபரமாயி...
அப்புறமா எல்லாக் கடவுளும், ஒண்ணு கூடிப் பேசி... ஒரு முடிவுக்கு வந்து என் பங்காளி "லூஸிஃபேரையே" விட்டு என்கிட்ட சமாதானம் பேச அனுப்புனாங்க.
அவரும் பதவிசா வந்து...
"தம்பி! ராசா! சாம்! நீ இங்க வந்து என்னத்த சாதிக்கப் போற.?
அங்க உன் நண்பர் சீனாவும், ஜெய்ப்பூர் அருணாவும், ரசிகன், இன்னும் உன் வலைப்பூ... சொந்த பந்தங்களெல்லாரும் உன்னைய காணாம தேடோ தேடுன்னு, தேடறாங்களாம்.
(அட! நம்மளக்கூட காணாம்-னு தேடறாங்களாமா? )இருந்தாலும் விடாப்பிடியாய்
"ஊஹும்., நான் போ மாட்டேன்னு, நான் உன் கூடதான் இருப்பேன்!" நான் பிடிவாதம் பிடிக்கவும்...
"சொன்னாக் கேளுடாக் கண்ணு! நீ நரகத்துல வந்து செய்யிற சேவைய , பூமியில பிளாக் எழுதி செய்யி. உன்னளவுக்கு, எழுத்துலயே மக்களைக் கொடுமைப் படுத்த என்னால கூட முடியாதுடா ராசா.- ன்னு பங்காளி ஐஸ் வைச்சுக் கெஞ்சவும்...
பின்னாடி வாலு துறு துறுக்க ஆரம்பிச்சிடுச்சு.
சரி... கடைசியா இந்தத் தகவலை மட்டும் கேட்டுக்கோ. அதுக்கப்புறம்...
நீ போனா போ... இருந்தா இரு.
உன் பேரன்
"Deamzz" மறுபடியும் எழுத வந்துட்டானாம்- ன்னு சொன்னதுதான்....
அடுத்த வார்த்தையக் கேக்க, அங்க நான் இருந்தாதானே.
இதோ உங்களுக்காக கீபோர்டத் தட்டிட்டு இருக்கேன்..
----------------------------------------------------------------------------------
உனக்கு சூடு, சொரணை இல்லியா?
(அப்பிடின்னா?)"சாம் தாத்தா காலமாகிறார்-னு" பதிவு போட்டுட்டு , எந்த முகத்தோட மறுபடி வலைப்பூ பக்கம் வந்தே?
(அதே குரங்கு முகம்த்தோடுதான்.)இப்பிடில்லாம் நீங்க கேள்வி கேட்டீங்கன்னா, கேடித்தனமா அந்த சம்பத்தப்பட்ட பதிவையே அழிச்சுட்டு... "நான் எப்போ சாம் தாத்தா காலமாறார்"- னு எழுதினேன்னு... ஒரு பெரிய்ய 'புளுகு மூட்டைய அவுத்து விட எனக்குத் தெரியாதா?----------------------------------------------------------------------------------
அதான் வந்துட்டமுல்ல?
அப்புறம் ஏன் திட்டறீங்க?